Monday 2 September 2013

பதிப்புரை

நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும்.

     சமயக் கணக்கர்கள், தத்தங் கொள்கைகளாகிய சமயத்தைப் பரப்புதற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிக் கண் சமய நுணுக்கங்களைக் காதைகள் வாயிலாகவும், எடுத்துக் காட்டு, அளவைகள் முதலிய வாயில்களாகவும் எழுதி நிலைபெறச் செய்யலாயினர். அதுகாரணமாகக் காலத்துக் கேற்றவாறு மொழியை வளர்த்து வளம்படுத்துவாருமாயினர். அந்நிலையில் நந்தமிழ் மொழிக்குச் சமண சமயத்தார் செய்த தொண்டுகள் அளப்பற்றனவாகும்.

     இச் சமணரால் ஒருகாலத்து நம் தமிழ்மொழி வளம்பெறலாயிற்றெனின், அது மிகையாகாது. அச்சமண சமயத்தை வளர்க்க நம் தமிழ்மொழியில் பேரிலக்கியங்களாகவும், தமிழர் நாகரிகப் பண்பை விளக்கும் வரலாற்று நூல்களாகவும் திகழும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், நம்பியகப் பொருள் போன்ற இலக்கணங்களும் பிறவும் எழுந்தன.

     இத்தகைய சமணர்தம் கொள்கையையும் வரலாற்றுண்மைகளையும் நம் தமிழக மக்கள் நன்குணர்ந்து கோடற்கு வாய்ப்பாகப் பழங்கால இலக்கியச் சான்று, கல்வெட்டு, ஆராய்ச்சிக் குறிப்புகளின் துணைகொண்டு தம் அஃகி அகன்று பரந்த அறிவால் திரு.மயிலை.சீனி.வேங்கடசாமியவர்கள் எழுதி உதவியுள்ளார்கள்.

     சிறந்த வரலாற்று நூலாகிய இதனை நல்முறையில் பதித்து வெளியிட்டுள்ளோம். தமிழகம் இந்நூலை ஏற்றுப் போற்றி எம்மை ஊக்குவிக்குமென நம்புகிறோம்.

                                       சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்