Monday 2 September 2013

5. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

சமணர்களின் கடைசித் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72 ஆவது வயதிலே கி.மு. 527 இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர், கேவல ஞானம் வாய்க்கப் பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்6. கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு சுணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

     மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குருவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்பு சுவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமித்திரரும், அவருக்கும் பின்னர் அபராசிதரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும், அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமய குரவராக இருந்தனர். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தார். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322 - 298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சந்தர் காலத்தவன்;  இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்7.

     சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதையறிந்து அச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும், அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக் குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாக முனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர், கி.மு. 297 இல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.8

     இச்செய்திகள் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி.மு. 931 இல்) இயற்றிய பிருகத் கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி.பி. 1838 இல்) இயற்றிய ‘‘ராஜாவளி கதெ’’ என்னும் நூலிலும் சமணர்களின் கர்ணபரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக் கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

     எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவச்செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமணசமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென்திசை நோக்கிவந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத் தக்கது.    

     வட நாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத்  துறவிகளும், மைசூரில் தங்கி வாளா காலங் கழித்திருக்கமாட்டார்கள். தமது மதக் கொள்கையைப் பரப்புவதையே தமது நோக்கமாகக் கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ்நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது.

     இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும் பௌத்த மத நூலில், இலங்கையிலே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி.மு. 377 முதல் 307 வரையில் இலங்கைத் தீவை அரசாண்ட பாண்டு காபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரி, கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக் குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.

     வட இந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட இந்தப் பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமண சமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென்றிருக்க வேண்டும்; வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியாக நேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. ஏனென்றால், சமணசமயத் துறவிகள், ஆறு முதலிய சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர, கடலில் பிரயாணம் செய்யக்கூடாது என்பது அந்த மதக் கொள்கை. ஆகவே, வட இந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். இலங்கைக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக்கூடிய அண்மையில் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம்.

     இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. மகாபாரத காலத்திலே, அஃதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22 ஆவது தீர்த்தங்கரராகிய நேமி நாத சுவாமி, கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணதீர்த்தங்கரராகப் பிறந்து சமணமதத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன: இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. 

     கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:

     அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் ‘‘துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து’’ காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்; (தொல்: எழுத்து, பாயிரம் உரை)

     ‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

     (தொல்: பொருள். அகத்திணை 32 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை)

     மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ் நாட்டிற் கொண்டுவந்து குடியேற்றிய செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஒரு அகத்தியர் வேளிரையும்  அருவாளரையும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த வரலாறாக இருக்கவேண்டும்.

     கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்கவேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ் நாட்டில் குடியேறியபின், சேர சோழ பாண்டிய அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடையவராக வாழ்ந்து வந்தனர் என்று சங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘அருவாஹி (ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செட்டி செய்வித்த குகை’’ என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது.10     

     இதில் கருதவேண்டியது என்னவென்றால், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர்தான் இச்சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பதும் ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தான் போலும்.

     கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணசமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்தபிறகு கண்ணன் பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலை நாட்டினார்கள் என்றும் தெரிந்தது. கண்ணன் பலராமன் வணக்கம் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலை எடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ணபிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாலின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆதாரத்துடன் தௌ¤வாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு நிறுத்துகிறோம்.

     இச்செய்திகளை இங்குக் குறிப்பிட நேர்ந்த காரணம் என்னவென்றால், கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - கண்ணபிரான் வாழ்ந்திருந்த மகாபாரதக் காலத்திலேயே - சமண சமயம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கேயாகும். கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்தியச் சரித்திர நூல்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியினாலே, கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினராக நேமிநாத தீர்த்தங்கரரும் சரித்திர காலத்தவர் ஆவார். ஆகவே, நேமிநாத தீர்த்தங்கரர் காலத்திலே - கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக் காலத்திலே - அகத்திய முனிவருடன் தமிழ்நாடு வந்த பதினெண்குடி வேளிர் அருவாளர் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருத்தல் கூடும். மிகப்பழைய அந்தக் காலத்திலே சமயப்பகையும் காழ்ப்பும் அதிகமாகப் பாராட்டப்படவில்லை. சமயப் பகையும் மதப் போர்களும் நிகழ்ந்தது மிகப் பிற்காலத்திலேயாகலின், சமரச நோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்தடன் இருந்தன. தமிழ்நாட்டிலிருந்த மதங்களில் மிகப் பழையமையானது சமணமதம் என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

 ________________________________________________________

6. சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.
7. மௌரியர் அல்லது மோரியர் தமிழ் நாட்டின்மீது படையெடுத்து வந்தனர் என்று சங்க நூல்களில் கூறப்படுகிற நிகழ்ச்சி இச் சந்திரகுப்த அரசன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுகின்றனர்.
8. வடக்கிருத்தல் - சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.
9. மகாவம்சம் x 97, 98, 99
10. No. 531 of 1937-38 Annual Rep. South Indian Epi. 1938.