Monday 2 September 2013

பின்னிணைப்பு 6. ஆருகத மதத்தை 'இந்து' மதத்தில் சேர்க்க முயன்றது

 புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப்பௌத்த மதத்தை ‘இந்து மதத்தில்’ சேர்த்துக்கொண்டு பின்னர், காலப்போக்கில் அந்த மதத்தை அழித்து விட்டதுபோல, சமண மதத்தையும் ‘இந்து’ மதத்தில் இணைத்துக்கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன்பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக்கொண்டனர். சமண மதத்தை ‘இந்து’ மதத்தின் கிளைமதமாக இணைத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வாம்.

     விஷ்ணுபுராணத்தில் கீழ்கண்ட கதை கூறப்படுகிறது; அசுரர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில் அசுரர் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற்கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமாலை வணங்கித் தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றிகொள்ளத் தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று மாயா மோகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி அனுப்பினார். அக்கட்டளைப்படியே சென்ற மாயாமோகர், தம் உடைகளைக் களைந்து தலையை மழித்துக் கையில் மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த நருமதை246 ஆற்றங்கரைக்குச் சென்று அவ்வசுரருக்கு நக்ன (சமண) மதத்தைப் போதித்து அவரை ஆருகதர் ஆக்கினார். பின்னர், மாயாமோகர் செம்பட்டாடை (சீவரம்) அணிந்து எஞ்சி நின்ற அசுரர்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தை) ப் போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதீக மதத்தை)க் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர். குன்றவே தேவர், அசுரரைப் பொருதுவென்றனர்.

     இக்கதையில் அசுரர் என்பது சமண பௌத்த மதத்தினரை என்பதும், தேவர் என்பது வைதீகப் பிராமணரை என்பதும் விளங்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து ‘இந்து’ மதத்துடன் இந்த மதங்களையும் இணைத்துக்கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது. மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறுக்கிறது: ரசி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து பேராற்றல் பெற்றனர். ஆற்றல்பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர்செய்து வென்று அவனது தேவலோகத்தைக் கைப்பற்றியதோடு, அவன் யாகத்தில் பெறுகின்ற அவிப்பாகத்தைப் பெறாதபடியுந் தடுத்துவிட்டனர். தோல்வியடைந்து உரிமையிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர்நிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான். பிரகஸ்பதி அவனது வேண்டுகோளுக்கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர்களுக்கு அவைதிக (சமண பௌத்த) மதங்களைப் போதித்தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதீக மதத்தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்றான்.

     தேவீபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப்பட்டடுள்ளது; இதில் காணப்படும் சிறு மாறுதல்யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அசுரரிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.

     விஷ்ணு புராணம், மச்ச புராணம், தேவி பாகவதம் இவற்றிற் கூறப்பட்ட இக்கதையைத் திரட்டிச் சேர்த்து, திருமாலின் கூறாகிய மாயாமோகர் சமண பௌத்த மதங்களைப் போதித்தார் என்று பதும புராணம் கூறுகின்றது.

     அக்கினி புராணம் கூறுவதாவது: தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென்றனர். தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுந்து முறையிட்டுத் தமது குறையை நீக்குமாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால் சுத்தோதனருக்கு மாயாமோகர் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பொத்தராக்கினார். எஞ்சி நின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை ஆருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப்புராணம் கூறுகின்றது.

     காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (19 ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான வித்துமாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்பவர் கடுந்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களிற் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களினாலாய முப்புரங்களைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரரின் ஆற்றலைக் கண்டு பொறாமையும் அச்சமுங்கொண்ட தேவர்கள் திருமாலிடஞ் சென்று அசுரரை அழிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டனர். வழக்கம்போலவே திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் சேர்ந்து அபிசாரயாகஞ் செய்து கணக்கற்ற பூதங்களையுண்டாக்கி அவற்றை ஏவி முப்புரங்களை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பூதங்கள் முப்புரங்களை அழிக்க முடியாமல் புறங்காட்டி ஓடின. பின்னர், திருமால் முப்புரதியரைச் சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து. ‘நீ புத்தனென்று அழைக்கப்படுவாய். நீ முப்புராதியரிடஞ் சென்று கணபங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியினின்றும் பிறழச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய் என்று கட்டளையிட்டார்.

     அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று முப்புராதியாருக்குக் கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பௌத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்.) அவர்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேவர் சிவனிடஞ் சென்று திரிபுராதியார் சிவநெறியைக் கைவிட்டனர் என்று கூற அவர், திரிபுரத்தை எரித்து அழித்தார். பின்னர், புத்தரும் நாரதரும் திரிபுராதியரை வஞ்சித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளக் காஞ்சிபுரத்திற்குச் சென்றபோது, ‘இரும்பு மலையொத்த பெரிய பாவப் பரப்புப் பருத்திமலையைப் போல நொய்மையாயிற்று.’ இதனைக் கண்டு வியப்படைந்த புத்தரும் நாரதரும் அவ்விடத்திற்குத் ‘திருப்பருத்திக்குன்றம்’247 எனப் பெயரிட்டனர் என்று இந்த மகாத்மியங் கூறுகின்றது.

     பாகவத புராணத்தில் திருமால், புத்தர் இருஷபர் என்னும் அவதாரங்களை எடுத்துப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்று கூறப்பட்டுள்ளது. பாத்ம தந்திரம் என்னும் வைணவ ஆகம நூல், திருமால் பாஞ்சராத்திரம் (வைணவம்), யோகம், சாங்கியம், சூனிய வாதம் (பௌத்தம்), ஆர்கத சாத்திரம் (சமணம்) ஆகிய மதங்களை யுண்டாக்கினார் என்று கூறுகின்றது. மற்றொரு வைணவ ஆகமமாகிய அஹிர்புத்நிய சம்ஹிதை, பௌத்த மதமும் சமண மதமும் பிரம்ம ரிஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை மயக்குவதற்காக உண்டாக்கப்பட்டன என்று கூறுகின்றது.

     திருமால் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்றார்:

    ‘‘கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புரம்புக்க வாறும்
                                          கலந்த சுரரை
    உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
    வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை
                                     விளங்க நின்றதும்
    உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி யுண்ணுமே.’’

     இதற்குப் பன்னீராயிப்படி உரை வருமாறு:-

     ‘‘கள்ளவேடத்தை = வேதபாஹ்ய புத்தரூபமான க்ருத்திர வேஷத்தை, கொண்டு = கொண்டு, போய் = போய், புரம் = த்ரிபுரத்திலே, புக்க ஆறும் = புக்கபிரகாரமும், அசுரரை = அங்குத்தை யசுரரை, கலந்து = உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் = சித்த பேதத்தை, செய்திட்டு = பண்ணி, உயிர் = அவர்கள் பிராணன்களை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = விரகுகளும்.’’

     நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5 ஆம்பத்து, 7 ஆம் திருமொழி, 5 ஆம் செய்யுளிலும் இச் செய்தி கூறப்படுகிறது:-

    ‘‘எய்தக் கூவுத லாவதே எனக்கு
    எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
    கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே.’’

     இதற்கு ஈடு 36 ஆயிரம்படி வியாக்யானம் வருமாறு:

     “கைதவங்கள் செய்யும் = கிருத்திரிமங்களைச் செய்யும். அஃதாவது - புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்குநின்ற அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தையைப் போக்கினபடி. வசனங்களாலும் யுக்திகளாலுங் கிருத்திரிமத்தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வளவினாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள்மாளப் பண்ணினபடி (வாள்மாளப் பண்ணினபடி = சவப்பிராயராகப் பண்ணினபடி, அஃதாவது கொன்றபடி.) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி ஒருவன் (சிவன்) அம்புக்கு இலக்கமாம்படி பண்ணிவைத்தான்.

     சிவனும் திருமாலும் சேர்ந்து முப்புரத்தை (பௌத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியதுபோலலே தேவாரம் முதலிய நூல்களும் கூறுகின்றன.

    ‘‘நேசன் நீலக் குடிஅர னேஎனா
    நீச ராய், நெடு மால்செய்த மாயத்தால்
    ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
    நாச மானார் திரிபுர நாதரே.’’               (அப்பர் தேவாரம்)

     கூர்ம்புராணம் திரிபுரதகனம் உரைத்த அத்தியாயத்தில், திருமால் புத்த முனிவராகவும் நாரதர் சமணமுனிவராகவும் உருவம் எடுத்துச் சென்று அசுரர் அவுணர் என்பவர்களை மயக்கும்பொருட்டுப் பௌத்த சமண மதங்ளைப் போதித்தார்கள் என்று கூறுகிறது:

    ‘‘சாக்கிய குருவின் மாயன் ஆங்கவர் புரத்தில் சார்ந்து,
    கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே
                                  ணியன்மேல் அன்பு
    நீக்கியவ் வசுரர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில்
    ஆக்கிநல் இலிங்க பூசை யறிவொடும் அகற்றி னானே.’’

    ‘‘ஆங்கண்மா ணாக்க ரோடு நாரத னணுகி யன்பிற்
    கோங்குறழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல்
    தீங்கினைச் செய்யா நிற்கும் சமயத்தில் சென்று நாளும்
    வாங்குவில் அவுணர் நெஞ்சம் மருண்டிட மாயை செய்தான்.’’

     இதே கருத்தைத் திருக்கூவப்புராணம், (திரிபுர தகனப் படலம்) கூறுகிறது:

    ‘‘மறமொன்று கின்ற அரணங்கள் தம்மில்
    வரும் அம்பு யக்கண் இறைவன்
    திறமொன்று புத்த னருகன் றயங்கு
    சினனென்ன வங்கண் அடையா
    அறமென்று வஞ்ச மதிநூல் மருட்டி
    யறைகின்ற காலை யவுணர்
    நிறமொன்று பூதி மணியோ டிலிங்க
    நிலைவிட்டு அகன்ற னரரோ.’’

     இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுணரிடம் சென்று பௌத்த சமண மதங்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங்களாகும். இரண்டும் ஒன்றே.

     இந்தக் கதைகளிலே, அவுணர் அல்லது அசுரர் என்பவர்களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவுணர் அழிந்தார் என்றும் கூறப்படுகின்றன. திரிபுரம் என்றால் என்ன? இரும்பு, செம்பு, பொன் என்னும் உலோகங்களால் அமைக்கப்பட்ட நகரங்கள் என்று புராணக் கதைகள் கூறும். திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிற தத்துவார்த்தக் கருத்தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல.

    ‘‘அப்பணி செஞ்சடை யாதிபு ராதனன்
    முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
    முப்புர மாவது மும்மல காரியம்
    அப்புரம் எய்தமை யாரறி வாரே.’’

     என்பது திருமூலர் திருமந்திரம். இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை? ‘‘முப்புரமாவது மும்மல காரியம்’’ என்று திருமூலரே, வேறு இடங்களில் இப்புராணக் கதையையும் கூறுகிறார்:

    ‘‘வானவர் தம்மைவலிசெய் திருக்கின்ற
    தானவர் முப்புரம் செற்ற தலைவன்’’

என்றும் கூறுகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு கருத்தும் உண்டு. அக் கருத்து யாது?

முப்புரம் என்று கூறுவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள் போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணி என்பது பௌத்த மதத்தைக் கற்றவர் நன்கறிவர். அவ்வாறே சமணருக்கு உறுதியான கோட்டை போன்றிருப்பவை நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மும்மணியாகும். இவற்றைத்தான் இக் கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழிந்துவிடும். முப்புரம் எரித்த கதையில், சிவனும் விஷ்ணும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணிகளை அழித்ததாக) க் கூறப்படுவது உருவகமாகும். இக்கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது, சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத்தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது. இதற்கு உதாரணங் காட்டி விளங்குவோம்.

     மதுரையை யடுத்த யானைமலையில் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் ‘‘யானைமாமலை யாதியாய இடங்களில்’’ சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று இருப்பதனால் யானைமலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில் சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறையில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த மலையிலே வைணவர்கள் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். கி.பி. 770 இல் மாரன்காரி என்னும் வைணவர் - இவர் பாண்டியனுடைய அமைச்சர் -, யானைமலைக் குகையிலே நரசிங்கப் பெருமாளை அமைத்தார் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது248. சமணக் கோயில் களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் மலையாகிய யானைமலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். இதற்குச் சைவர்களும் உடன்பட்டிருந்ததோடு, ஒரு புராணக் கதையையும் கற்பித்துக் கொண்டார்கள். அஃது எந்தக் கதை என்றால், திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சோமசுந்தரப் பெருமான் நாரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது.

    ‘‘இங்கித நெடுங்கோ தண்டம்
    இடங்கையில் எடுத்து நார
    சிங்கவெங் கணைதொட் டாகந்
    திருகமுன் னிடந்தாள் செல்ல
    அங்குலி யிரண்டால் ஐயன்
    செவியுற வலித்து விட்டான்
    மங்குலின் முழங்கும் வேழ
    மத்தகங் கிழிந்த தன்றே.’’

     பிறகு, இந்த யானைமலையில் சிவன் எய்த நரசிங்க அம்பு நாரசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் கூறுகிறது:-
    ‘‘வம்புளாய் மலர்ந்த ஆரான்
    வரவிடு மத்தக் குன்றில்
    சிம்புளாய் வடிவங் கொண்ட
    சேவகன் ஏவல் செய்த
    அம்புளாய்த் தூணம் விள்ள
    அன்றவ தரித்தவா போல்
    செம்புளாய்க் கொடிய நார
    சிங்கமாய் இருந்த தன்றே.’’

     யானைமலையில் அஜ்ஜநந்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானைமலையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன்காரி யானைமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும், சொக்கப்பெருமான் நரசிங்க அம்பு எய்து சமணருடைய யானையை (மலையை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்தால், சைவரும் வைணவரும் சேர்ந்து சமணருடைய யானைமலையைக் கைப்பற்றினர் என்னும் உண்மை புலனாகும். இதுபோன்று வேறு செய்திகளும் உள. விரிவஞ்சி நிறுத்துகிறோம்.

 ________________________________________________________

246. நருமதை ஆற்றங்கரையிலும் அதைச் சூழ்ந்த இடங்களிலும் சமண மதம் பண்டைக் காலத்தில் செழிப்புற்றிருந்த செய்தி ஆங்குக் கிடைக்கும் சிலாசாசனங்களாலும் சிற்ப உருவங்களாலும் தெரிய வருகிறது.

247. இக் கதையில் திருப்பருத்திக் குன்றம் கூறப்படுகிறது. திருப்பருத்திக் குன்றத்தில் இப்போதும் சமணக்கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக் கருகிலுள்ள இத்திருப்பருத்திக் குன்றத்திற்குச் சினகாஞ்சி என்றும் பெயர். காஞ்சியில் பண்டைக் காலத்திலிருந்த பௌத்த சமணக் கோயில்கள் பிற் காலத்தில் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டது போல, திருப் பருத்திக் குன்றத்துச் சமணக்கோயிலும் ‘இந்து’ கோயிலாக மாற்றப்பட்டு விடும் என்னும் நம்பிக்கையுடன் காஞ்சி மகாத்மியத்தின் ஆசிரியர் இவ்வாறு கதை கற்பித்துக்கொண்டார் போலும். ஆனால், நற்காலமாகத் திருப்பருத்திக் குன்றம் இன்னும் சமணக் கோயிலாகவே இருந்து வருகின்றது.

248. Ep. Indi. Vol VIII P. 317.