Monday 2 September 2013

பின்னிணைப்பு 1. ஆறுவகையான உயிர்கள்

     சமண சமயத்தில் உயிர்களின் வகை ஆறு வகையாகக் கூறப்படுவது போலவே, தொல்காப்பியரும் ஆறுவகையான உயிர்களைக் கூறுகிறார். தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியலில், தொல்காப்பியர் ஓதிய சூத்திரங்களும் அவற்றிற்கு இளம்பூரணர் என்னும் சமணசமய உரையாசிரியர் எழுதிய உரையும் கீழே தரப்படுகின்றன.

    ‘‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
   மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
    ஆறறி வதுவே யவற்றொடு மனனே
    நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

என்னுதலிற்றோ வெனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று.

     ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயிராவது உடம்பினாலும் வாயினாலும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினாலும் மூக்கினாலும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பினாலும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம்பினாலும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் மனத்தினானும் அறிவது; இவ்வகையினான் உயிர் ஆறுவகையினானாயின.

     இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். நாவினால் கைப்பு காழ்ப்பு துவர்ப்பு உவர்ப்பு புளிப்பு மதுரம் என்பன அறியும். மூக்கினால் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை செம்மை பொன்மை பசுமை கருமை நெடுமை குறுமை பருமை நேர்மை வட்டம் கோணம் சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும் சொற்படும் பொருளும் அறியும். மனத்தினா லறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும், இஃது எத்தன்மை எனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல்.

     இவ்வகையினான் உலகிலுள்ள வெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி, அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறுதும்,

    புல்லும் மரனும் ஓரறி வினவே
    பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே

     ஓரறிவுயிராமாறு புல்லும்மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக் கிளைப்பிறப்புப் பிறவும் உள என்றவாறு.

     பிறவாவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன.

    நந்து முரளு மீரறி வினவே
    பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

    ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று.

     ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு.

     நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க.

    சிதலும் எறும்பும் மூவறி வினவே
    பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

     மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     சிதலும் எறும்பும் மூவறிவின. அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள என்றவாறு. பிறவாவன அட்டை முதலாயின.

    நண்டுந் தும்பியு நான்கறி வினவே
    பிறவு முளவே யக்கிளைப் பினப்பே.

     நாலறியுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று

     நண்டுந் தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள வென்றவாறு.

     பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க.

    மாவும் புள்ளும் ஐயறி வினவே
    பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

     ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய. அக்கிளைப் பிறப்பும் பிறவும் உள என்றவாறு.

     பிறவாவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும்.

    மக்க டாமே யாறறி வுயிரே
    பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

     ஆறறிவுயிர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர்; அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள என்றவாறு.

    ‘‘பிறவாவது தேவர் அசுரர் இயக்கர் முதலாயினார்.’’

    சமணர் கூறுவது போன்று தொல்காப்பியரும் ஆறுவகை உயிர்களைக் கூறுகிறபடியினாலே தொல்காப்பியர் சமணர் என்று கருதப்படுகிறார்.