Monday 2 September 2013

பின்னிணைப்பு 4. சில புராணக்கதைகள்

சில புராணக் கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கிவந்தன என்பது ஆராய்ச்சியினால் அறியப் படுகின்றன. அவற்றில் சிலவற்றை ஆராய்வோம்.

     ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி என்னும் சைவசமய நூலினாலும் அதன் பழைய உரையினாலும் சில செய்திகள் அறியப்படும். இந்தப்பரணி நூலில், கோயில் பாடியது, 70 ஆவது தாழிசையில் இச் செய்தி கூறப்படுகிறது.

    ‘‘மலைகொண் டெழுவார் கடல்கொண் டெழுவார்
    மிசைவந்த துசிலா வருடஞ் சொரிவார்
    நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற்
    கிவரிற் பிறர்யா வர்நிசா சரரே.’’

இதற்கு, பெயர் அறியப்படாத பழைய உரையாசிரியர் கூறுவதாவது: ‘‘யானைமலை நாகமலை யென இரண்டு மலை உளவென அவையிற்றைக் காட்டி. ‘பண்டு இவை அமணர் மந்திரவாத வலிகாட்டின மலைகள். மதுரையை ஒரு மலை யானையா யழிக்கவும் அவ்வியானை மதுரையில் வருவதன்முன் இந்த மலை மகாநாகமாய் அந்த யானையை விழுங்கவுங் காட்டி உயிர் பெறுத்தி நடத்திவர, என் சுவாமி (பாண்டியன்) சாதுவாதலிற் பயப்பட்டு இம்மகர நகரத்திற் புக்கனர். பின்பு எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமுமுண்டு. உறையூரில் கல் வருஷமும் (வருஷம் - மழை)மண் வருஷமும் பெய்வித்து அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்) அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளி யாய்த்து’ என்றவாறு.

     இதில் சமணர் செய்ததாக மூன்று செய்திகள் கூறப்படுகின்றன. 1. மதுரைக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளில் ஒன்றை ஆனையாகவும் இன்னொன்றை மலைப் பாம்பாகவும் அமையச் செய்து அவற்றிற்கு உயிர் கொடுத்து யானையைப் பாம்பு விழுங்குவதுபோல் செய்து பாண்டியனுக்குச் சமணர் காட்டினர். 2. ஏழுகடல்களையும் ஓர் இடத்தில் வரும்படி செய்து அதனைப் பாண்டியனுக்குக் காட்டினர். 3. உறையூரில் கல்மழை மண்மழை பெய்யச் செய்து சமணர் அவ்வூரை அழித்தனர்.

     இவற்றை ஆராய்வோம்: பண்டைக் காலத்திலே, மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டு மலைகளிற் சமண முனிவர் எண்ணிறந்தோர் தவஞ்செய்திருந்தனர் என்பது சைவ சமய நூல்களினாலும், சமணசமய நூல்களினாலும் இந்த மலைகளில் உள்ள குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளாலும் பிற சான்றுகளாலும் தெரியவருகிறது. இந்த எட்டுமலைகளில் யானைமலை நாகமலை என்பவையும் சேர்ந்தவை. யானை தன் முன்னங்கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று காணப்படுவதாலும், பாம்புபோன்று காணப்படுவதாலும் இந்த மலைகளுக்கு முறையே யானை மலை, நாகமலை எனப் பெயர் அமைந்தனபோலும். இந்த மலைகளிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் தங்கித் தவஞ்செய்து வந்தனர் என்பதற்குச் சான்றுகளை இந்நூல் 10 ஆம் அதிகாரத்தில் கூறினோம். இந்த மலைகள் நாகமும் யானையும் போன்று காணப்படுவதாலும் இம்மலைகளில் சமண முனிவர் இருந்தமையாலும் இந்துக்கள், சமணர் மேல் பழிசுமத்தும் நோக்கத்துடன், பாம்பு யானையை விழுங்குவதுபோன்று சமணர் மந்திரசாலம் செய்தார்கள் என்று கதை கட்டினார்கள்போலும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில், ‘யானை மாமலையாதியாய இடங்களில்’ சமண முனிவர் இருந்தனர் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர் பாம்பு யானையை விழுங்கும்படி சமணர் செய்து காட்டியதாகச் சொல்லப்படும் கதையைக் கூறவில்லை. அவர் காலத்தில் இந்தக் கதை வழங்கப்பட வில்லைபோலும். அக்காலத்தில் இக்கதை வழங்கியிருந்தால், ஞானசம்பந்தர் இச்செய்தியையுங் கூறியிருப்பாரன்றோ? எனவே, சம்பந்தர் காலத்தில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வழங்காத இக்கதை, ஒட்டக்கூத்தர் காலத்தில் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்) வழங்கிவந்ததாகத் தெரிகிறது. (இந்த மலைகளைப்பற்றிய ஏனைய செய்திகளைச் ‘சமணத் திருப்பதிகள்’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளோம்.)

     இனி, சமணர் ஏழுகடல்களை அழைத்ததாகச் சொல்லப்படும் செய்தியை ஆராய்வோம். மதுரைக்கு அருகிலே மேட்டுப்பட்டி என்னும் கிராமத்துக்கு அருகில் சித்தர்மலை என்னும் ஒரு மலையுண்டு. கோடைக்கானல் ரோட்டு அம்மையநாயகனூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே பதின்மூன்று மைல் சென்றால் இக்கிராமத்தையடையலாம். மேட்டுப்பட்டியில் உள்ள இந்தச் சித்தர்மலையில் சமணமுனிவர் இருந்த குகைகளும் கற்பாறையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் இன்றும் காணப்படுகின்றன. அன்றியும் இங்கு ஏழுகடல் எனப் பெயருடைய சுனையொன்று உண்டு243. பண்டைக்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தபடியாலும் ஏழுகடல் என்னும் சுனை இருப்பதாலும் ஏழுகடல்களையும் ஓரிடத்தில் வரவழைத்துப் பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று இக்கதையைக் கற்பித்திருக்கக்கூடும்.

     உறையூரை அழித்த செய்தியை ஆராய்வோம். உறையூரில் தொன்றுதொட்டுச் சமணர் இருந்தவந்தனர். இவ்வூருக்கருகிலுள்ள திருச்சிராபள்ளி மலைக்குகைகளிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. சிலவேளைகளில் வெள்ளப்பெருக்காலும் மண்காற்றினாலும் வேறு காரணங்களாலும் ஊர்கள் அழிந்துபோவது இயற்கை. (இவ்வாறு அழிவுண்ட ஊர்கள் சில இக்காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.) இந்த இயற்கைப் படி உறையூரும் மண்காற்றினால் அழிந்திருக்கக்கூடும். ஆனால், சமணர் மந்திரத்தினால் அழித்தார்கள் என்பது நம்பத்தக்கதன்று.

     இவ்வாறெல்லாம் சமணர்மீது சுமத்தப்பட்ட இக்கற்பனைக் கதைகள் நாளடைவில் சமணருக்குப் பெருமையையும் மதிப்பையும் உண்டாக்கிற்றுப்போலும், சமணர் மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட தெய்வ சக்தியும் மந்திர சக்தியும் உள்ளவர் என்னும் எண்ணத்தைப் பாமர மக்களுக்கு இக்கதைகள் உண்டாக்கிவிட, அவர்கள் சமணரை நன்கு மதித்தனர் போலும். ஆகையால், சமணர் செய்ததாக முதலில் கற்பிக்கப்பட்ட இக்கதைகளை மாற்றிச் சிவபெருமான் தமது ஆற்றல் தோன்றச் செய்த திருவிளையாடல்கள் என்று கூறிப் பிற்காலத்தில் புராணங்களை எழுதிக்கொண்டார்கள் போலும்.

     யானையைப் பாம்பு விழுங்குவதுபோல் சமணர் காட்டினார்கள் என்னும் கதையை இரண்டாகப் பகுத்து, மதுரையான திருவிளையாடல் என்றும், யானை எய்த திருவிளையாடல் என்றும் பிற்காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகின்றன. மதுரையை அழிக்கச் சமணர் பாம்பையுண்டாக்கி அனுப்பினர் என்றும் அதனைச் சிவன் அம்புவிட்டுக் கொல்ல அப்பாம்பு விஷத்தைக் கக்கிற்று என்றும், பிறகு சிவன் தமது சடையில் உள்ள மது வெள்ளத்தை விஷத்தின்மேல் தௌ¤த்து விஷத்தை மதுவாக்கினபடியால் அவ்வூருக்கு மதுரை எனப் பெயர் ஏற்பட்ட தென்றும் கதை கற்பித்தனர். அவ்வாறே, சமணர் யானையை யுண்டாக்கி மதுரையை அழிக்க ஏவினர் என்றும் சிவபிரான் அதை அம்பெய்து கொன்றார் என்றும் இன்னொரு கதையையும் கற்பித்துக் கொண்டனர்.

     பாண்டியனை அச்சுறுத்தி வசப்படுத்தச் சமணர் ஏழுகடல்களை அழைத்துக் காட்டினார் என்று கூறப்பட்ட கதை, பிற்காலத்தில் சிவபெருமான் செய்ததாக மாற்றி அமைத்துக்கொண்டு, எழுகடலழைத்த திருவிளையாடல் என்று பெயர் கொடுத்தனர். இதில், பாண்டியன் மகளான தடாதகைப் பிராட்டியாரைச் சிவபெருமான் மணஞ்செய்த பிறகு தடாதகையின் தாயார் நீராடுதற்பொருட்டுச் சிவபிரான் தமது ஆற்றலினால் ஏழுகடல்களை மதுரைக்கு வரவழைத்துக்கொடுத்தார் என்று கதை கூறப்பட்டுள்ளது.

     சைவர் கட்டிய கதையில் ஏழுகடல் என்பது, மேட்டுப்பட்டிக் கிராமத்தில் சித்தர்மலையிலுள்ள ஏழுகடல் என்னும் சுனையையன்று, சொக்கநாத சுவாமி கோயிலுக்கு முன்பாகப் பிற்காலத்தில் ஏழுகடல் அல்லது சப்தசாகரம் என்னும் பெயரால் அமைக்கப்பட்ட குளத்ததைக் குறிக்கிறது. ஏழுகடல் தீர்த்தம் என்றும் இது கூறப்படும். இக்குளம் சக ஆண்டு 1438 இல் (கி.பி. 1516 இல்) சாளுவ நரச நாயகன் நரசையன் என்பவரால் அமைக்கப்பட்ட தென்பது இந்தச் சப்தசாகரத் தீர்த்தங்கரையில் உள்ள சாசனத்தினால் தெரியவருகிறது.244

     சமணர் உறையூரை அழித்ததாகக் கூறப்பட்ட கதையும் பிற்காலத்தில் மாற்றப்பட்டு, சிவபெருமான் சாபத்தினால் மண்மாரி பெய்து உறையூர் அழிக்கப்பட்டதாகப் புராணக கதை கற்பிக்கப்பட்டது. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணம், உறையூர் அழித்த சருக்கத்தில் காண்க. 

     இவ்வாறு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் காலத்தில் இல்லாத கதைகள், கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் காலத்தில் சமணர் செய்ததாக வழங்கப்பட்டுப் பின்னர் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் சிவபெருமான் செய்ததாகத் திருத்தியமைக்கப்பட்டன என்பது இதனால் அறியப்படும்.

     புராணக்கதைகள் எவ்வாறு புனையப்படுகின்றன என்பதற்கும் இக்கதைகள் காலத்துக்குத் காலம் எவ்வாறெல்லாம் மாறு படுகின்றன என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

 ________________________________________________________

      243. An. Rep. Arch.Dept S. Circle 1910-1911. P.50-51

      244.161 of 1937-38, S.I. Ep. Rep. 1937-38, P.104.